உ த்தியோகத்தர்கள் விபரங்கள்

பெயரிடப்பட்ட அதிகாரி

திரு . இ .த .ஜெயசீலன்

 பிரதேச செயலர்

தகவல் அதிகாரி

திருமதி S.குணஜா

உதவிப் பிரதேச செயலர்

 

RIT

தகவலறியும் உரிமைச் சட்டமும் அதன் நோக்கமும்

தகவல் அறியும் உரிமையானது மக்களுக்கான அடிப்படை உரிமையாக பல்வேறு நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும், 19 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பின்னர், அரசியலமைப்பின் உறுப்புரை 14(அ) இன் மூலம் தவலை பெறுவதற்கான உரிமையானது ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தகவலறியும் உரிமைச் சட்டமும் இலங்கைப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டுள்ளது.

ஏதோ ஒருவகையில் ஒவ்வவொருவரும் வரி செலுத்துபவர்கள் என்ற முறையில், அவர்கள் செலுத்தும் பணத்திற்கு என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கு உரிமை இருக்கின்றது.

அதனால் தகவல் அறியும் உரிமையானது நாட்டில் பணத்திற்கு என்ன நடக்கின்றது, அல்லது அப்பணம் எவ்வாறு செலவிடப்படுகின்றது, பிரதிபலன் எவ்வாறு அமைகின்றது போன்ற விடயங்கள் தொடர்பாக, அந் நாட்டின் பிரஜைக்கு விடயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது.

தகவலறியும் உரிமையை உறுதிப்படுத்தப்படுத்துவதன் மூலம் பின்வரும் நோக்கங்களை அடையக்கூடியதாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படு கின்றது.
1.பகிரங்க அதிகாரசபைகளின் வெளிப்படைத்தன்மையை பேணலாம்
2.பகிரங்க அதிகாரசபைகளின் பொறுப்புக்கூறும் பண்பாட்டைப் பேணி வளர்க்கலாம்
3.மக்கள் ஊழலை எதிர்த்து நிற்கும் பொறிமுறையை தாபிக்கலாம்
4.பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துதல் ஊடாக மக்கள் முழுமையாகப் பங்கேற்கக் கூடிய ஜனநாயகத்தை ஏற்படுத்த முடியும்.


தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது 100 நாள் வேலைத்திட்ட வாக்குறுதிகளில் ஒன்றாக தகவலறியும் சட்டத்தை இயற்றலைக் குறிப்பிட்டிருந்தார். இதன் பின்னணியில் 2015 ஏப்ரல் 28 ஆம் திகதிஇ 19 வது திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. இதில் அரசியலமைப்பின் உறுப்புரை 14(அ) இல் தகவலறியும் உரிமையானது பிரஜைகளுக்கான அடிப்படை உரிமை ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது.


உறுப்புரை 14(அ) இன் கீழ்இ சட்டத்தினால் அளிக்கப்பட்டவாறே இந்த உரிமை அமுலாக்கப்படக் கூடியதாகும். எனவே, தகவலறியும் உரிமை சட்டம் இல்லாத நிலையில் தகவலறியும் உரிமை தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடு பயனற்றதாகவே இருந்தது. எனவே தான் 2016 மார்ச் 4 இல் பாராளுமன்றத்தினால் தகவலறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டதுடன் 2016 ஆகஸ்ட் 4 ஆம் திகதி சபாநாயகர் ஒப்பமிட்டதன் மூலம் அது சட்டமாக மாறியது.

 

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டம்


 இனி தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கூறப்பட்டுள்ள விடயங்கள் என்ன என்பதை நோக்குவோம்.

இச்சட்டத்தின் பிரிவு – 2 இன் படி தகவலறியும் சட்டத்தினை அமுல்படுத்தும் பொறுப்பு – வெகுசன ஊடக அமைச்சிற்கு உரியதாகும்.
இச்சட்டத்தின் பிரிவு – 3 இன் படிஇ பிரசை ஒவ்வொருவரும் ஒரு பகிரங்க அதிகாரசபையின் (அரச நிறுவனம்) உடைமையில்இ கட்டுக்காப்பில் அல்லது கட்டுபாட்டில் இருக்கின்ற தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமையொன்றைக் கொண்டிருக்க வேண்டும்.

தகவல் பெறும் உரிமை மறுக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள்

தகவலறியும் சட்டத்தினை பயன்படுத்தி அரச நிறுவனம் ஒன்றிடமிருந்து அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் என ஒருவர் எதிர்பார்க்க முடியாது. குறிப்பாக சட்டத்தின் பிரிவு – 5 இன் படி பின்வரும் சூழ்நிலைகளில் தகவலை அணுகுதலுக்கான கோரிக்கை மறுக்கப்படலாம்.


•எந்தவொரு பொதுமக்களுக்கும் அக்கறையற்ற தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான தகவல்
•அரசின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள்
•சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பான இரகசிய தகவல்கள்
•இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய தகவல்கள்
•வியாபார இரகசியம்
•மருத்துவப் பதிவேடுகள்
•எவரேனும் அலுவலருக்கும் பகிரங்க அலுவலரொருவருக்கும் இடையிலான வெளிப்படுத்த அனுமதிக்கப்படாத ஏதேனும் தொடர்பாடல்
•ஏதேனும் குற்றச்செயலை கண்டறிதலில் இடையூறு விளைவிக்கும் தகவல்
•தகவலின் வெளிவிடுகையானது நீதிமன்ற அவமதிப்பாக இருத்தல்
•தகவலின் வெளிவிடுகையானது பாராளுமன்ற சிறப்புரிமைகளின் மீறலாக உள்ளவிடத்து
•தகவலின் வெளிவிடுகையானது பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படுவதாகவுள்ள பரீட்சையொன்றின் சீரியநிலைக்கு தீங்காக இருத்தல்.

 

தகவலறியும் சட்டத்தினை நடைமுறைப்படுத்தல்

இச் சட்டத்தினை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்த பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தின் பிரிவு – 7 இன் படி அமைச்சுகள், திணைக்களங்கள், பகிரங்கக் கூட்டுத்தாபனங்கள், உள் மன்றங்கள், அரசாங்கத்தினால் பொருளளவில் நிதியளிக்கப்படுகின்ற அரச சார்பற்ற ஒழுங்கமைப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், நியாயசபைகள் மற்றும் ஏனையவை தகவல் அணுகலை வழங்கக்கூடியதாகவும் பதிவேடுகளை பராமரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அவர்கள் அனைத்து பதிவேடுகளையும் மின்னணு வடிவத்தில்  பாதுகாக்க முயல வேண்டும்.

மேலும் பிரிவு – 8 ஆனது ஒரு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஒருவர் ஒவ்வோர் ஆண்டும் முறையே யூன் 30 ஆந் திகதிக்கும் டிசெம்பர் 30 ஆந் திகதிக்கும் முன்னராக ஆண்டுக்கு இரு தடவைகள் தமது அமைச்சுப் பற்றிய தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் வண்ணம் அறிக்கை வெளியிட வேண்டும் என தேவைப்படுத்துகின்றது.

பிரிவு – 9 இன் படி அரசானது ஏதேனும் செயற்றிட்;டங்களை தொடங்குவதற்கு 3 மாதங்களுக்கு முன்னர் அது பற்றி பொது மக்களிற்கு அறிவிக்க வேண்டும் என்பதுடன் குறித்த செயற்றிட்டம் தனிநபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருப்பின் அவர்களுக்கும் அது பற்றி தெரியப்படுத்துதல் வேண்டும்.


பிரிவு – 11 ஆனது தகவலுக்கான உரிமை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படல் வேண்டும் எனவும் ஆணைக்குழுவானது அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரை மீது சனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐந்து (05) ஆட்களைக் கொண்டமைதல் வேண்டும். பின்வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இதில் இடம்பெற்றிருப்பர்.
1. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்இ
2. வெளியீட்டாளர்கள்
3. பதிப்பாசிரியர்கள் மற்றும்
4. ஊடக ஆட்களின் ஒழுங்கமைப்புக்கள்
5. வேறு சிவில் சமூக ஒழுங்கமைப்புக்கள்


பிரிவு – 23 இன் படி அனைத்து பகிரங்க அதிகாரசபைகளும் தகவல் அலுவல்களை நியமித்தல் வேண்டும். அவர்களே தகவலுக்கான கோரிக்கையைக் கையாளுதல் வேண்டும்.

 

தகவலைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை பிரிவு (24 – 29)


அரச நிறுவனம் ஒன்றிலிருந்து தகவல் ஒன்றைப் பெற்றுக்கொள்ள பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கை முறை பற்றி இனி கவனம் செலுத்துவோம்.

ஏதேனும் தகவலைப் பெற விரும்பும் எவரேனும் பிரசை தோதான தகவல் அலுவலருக்கு தேவைப்படும் தகவல் பற்றிய விபரங்களை எழுத்திலே கோருதல் வேண்டும.

தகவல் அலுவலர் இயன்றளவு விரைவாகவும் 14 வேலை நாட்களுக்கு மேற்படாமலும் கோரப்பட்ட தகவலை வழங்க அல்லது கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும்.

கோரிக்கையானது நிராகரிக்க முடிவு செய்தால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தகவல் அலுவலர் கோரிக்கையை விடுத்த பிரசைக்கு அறிவிக்க வேண்டும்.

தகவலை வழங்க முடிவு செய்தால் அத்தகைய முடிபு எடுக்கப்பட்டதிலிருந்து 14 நாடகளினுள் குறித்த தகவல் பிரஜைக்கு அளிக்கப்படுதல் வேண்டும்.

தகவலுக்கான கோரிக்கையானது ஒரு பிரசையின் உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் சம்மந்தப்படுகின்றவிடத்து அதற்கான பதிலளிப்பு கோரிக்கை கிடைக்கப்பெற்றதிலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குள் செய்யப்படுதல் வேண்டும்.

பிரஜை ஒருவர் கோரும் தகவலானது மூன்றாம் நபருடன் தொடர்புடையதாக இருப்பின் தகவலை வழங்குவதா? வேண்டாமா? என்பது பற்றி 7 நாட்களுக்கு அறிவிக்கும் படி தகவல் அலுவலர் மூன்றாம் நபரை கோருதல் வேண்டும். மூன்றாம் நபர் தகவலை வழங்க சம்மதியாதுவிடின் தகவலை வழங்கக்கூடாது. மாறாக மூன்றாம் நபர் சம்மதித்தாலோ அல்லது பதில் தராவிட்டாலோ அத்தகவலை வழங்க வேண்டும். (பிரிவு – 29)

 

மேன்முறையீடுகள்


 தகவல் அலுவலரினால் தரப்பட்ட காரணங்களுடன் திருப்திப்படாத பிரசையொருவர் தகவல் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு ஒன்றை முன்வைக்கலாம்.


அதே போல் ஆணைக்குழுவின் முடிவினால் பாதிக்கப்பட்ட பிரசையொருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதன் முடிபுக்கெதிராக மேன்முறையீடு செய்யலாம்.

 

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் பிரயோகம்

(கட்டுரையின் கீழ் வரும் இப்பகுதி இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் பிரசுரம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது)

எவ்வாறான சந்தர்ப்பங்களில் தகவலறியும் சட்டத்தினை பிரஜை ஒருவர் பிரயோகிக்க முடியும் என்பது பற்றி உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

உதாரணம் – 01
பிரஜை ஒருவரின் முச்சக்கர வண்டி பாதையில் உள்ள குழிகளில் விழுந்து உடைந்து பழுதடையும் போது அவரது நகரத்தில் உள்ள பாதைகளை செப்பனிட்டு திருத்துவதற்காக ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக கேள்வி எழுப்புவதறகான உரிமை அவருக்கு இருக்கின்றது.
•பாதை திருத்தப் பணிகளுக்காக எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது?
•இந்த திருத்தப் பணிகளுக்காக வெளிநாட்டு உதவியாக பணம் வழங்கப்பட்டிருந்தால் அதில் இருந்து எவ்வளவு தொகை செலவிடப்பட்டது?
•பாதையை செப்பனிடுவதற்காக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்கப்பட்டது?
•திருத்த வேலைகளுக்கான மூலப் பொருட்களுக்கான செலவினம் என்ன?

போன்ற கேள்விகளை எல்லாம் கேட்கும் உரிமை பிரஜைக்கு உண்டு. அப்போதே பாதை திருத்த வேலைகளுக்காக ஒதுக்கப்பட்ட பணம் சரியான முறையில் செலவிடப்பட்டதா அல்லது ஒப்பந்தக்காரர்களின் சட்டைப் பைகளுக்குச் சென்றதா என்பது பற்றி அறிந்து கொள்ள முடியும்.

உதாரணம் – 02
பிரஜை ஒருவர் தமது குழந்தையை ஏன் அரசாங்க பாடசாலைக்கு அனுமதிக்கவில்லை என்று கேள்வி கேட்பதற்கு அவருக்கு உரிமை இருக்கின்றது.

உதாரணம் – 03
பிரதேசம் ஒன்றில் பாலம் ஒன்றை நிhமாணிப்பதற்காக கடந்த வருட வரவு செலவுத் திட்டதில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும் இன்னமும் வேலைகள் நடைபெறவில்லை எனின் ஒதுக்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக பிரதேச சபையிடம் கேள்வி எழுப்பும் உரிமை இருக்கின்றது.
•பாலத்தை நிர்மாணிப்பதற்கு தொழிலாளர்களுக்காகவும் நிர்மாண வேலைகளுக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குமாக எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டது?
•நிர்மாண வேலைகளை பொறுப்பேற்றுள்ள ஒப்பந்தக்காரர் யார்?
•ஏன் பாலத்தின் நிர்மாணம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை?

போன்ற வினாக்களை பிரதேச சபையிடம் வினவ முடியும்.


மூலம்:- W.G.W.Gnanathayalan – வி.கு.வின்சன் ஞானதயாளன்

 

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு

 

இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை சட்டத்தின் 11ஆம் பிரிவின் கீழ் குறித்த சட்டத்தின் செயற்பாட்டை கண்காணிக்கும் மற்றும் அமுல்படுத்தும் பிரதான நிறுவனமாக உள்ளது. குற்றமிழைக்கும் உத்தியோகத்தர்களுக்கு எதிரான, ஒட்டியொழுகாமை மீதான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை சிபார்சு செய்வதற்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ள ஒரு நியாதிக்க சுயாதீனசபையாக இது உள்ளது. சட்டத்தில் வரைவிலக்கணம் செய்த குற்றங்களைச் செய்தவர்களை (பிரிவுகள் 15இ38(2) மற்றும் 39(4))சட்டத்தின் முன் நிறுத்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

அரசியலமைப்புச் சபையின் சிபார்சின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவரையும், 4 உறுப்பினர்களையும் அங்கத்தவர்களாககொண்டுள்ளது. இந்த ஆணைக்குழுவிற்கு 1) இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 2) ஊடக நிறுவனங்கள், மற்றும் 3) ஏனைய சிவில் சமூக நிறுவனங்கள் (பிரிவுகள் 12 (1))ஆகியவற்றல் சிபாரிசு செய்யப்பட்ட தலா ஒருவரையும் நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை கடமைப்பட்டுள்ளது.

சிபார்சு செய்யப்படும் நபர்கள் பொதுவாழ்வில் மதிப்பிற்குரியவர்களாக இருப்பதுடன், அரசியல், அரச துறை அல்லது நீதித்துறை அல்லது வேறு ஏதும் இலாபகரமான அலுவலகம் என்பவற்றுடன் அல்லது வேறு ஏதும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பற்ற இலாப நோக்கம் கொண்ட தொழில்வாண்மை அல்லது ஏதும் தொழிலை மேற்கொள்பவராக இல்லாது அனுபவமிக்கவராக இருக்க வேண்டும் (பிரிவு 12(2)).

ஆணையாளர்களின் பதவிக்காலம் 5 வருடங்களாக இருப்பதுடன் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் 12(6) பிரிவின் கீழ் விதிவிலக்களிக்கப்பட்டுள்ள தகவல்களை வெளியிடாதிருக்கவும் கடமைப்பட்டுள்ளார்கள் (பிரிவு 12(7)).

ஆணைக்குழுவானது ஒரு பணிப்பாளர் நாயகத்தையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் தேவையான பணியாளர்களையும் நியமிக்கும். ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அதன் நிறைவேற்று அதிகாரியாக விளங்குவார் (பிரிவு 13).

ஆணைக்குழு பாராளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு செயற்படுவதுடன் அதற்கு கிடைக்கும் நன் கொடைகள், அன்பளிப்புக்கள் அல்லது மானியங்கள் மட்டும் வெளிநாட்டு மூலங்களில் இருந்து கிடைக்கும் நிதி ஆகியன ஆணைக்குழுவின் கணக்கில் வரவு வைக்கப்படும் (பிரிவு 16 (1)).

 

நோக்கு


தகவலறியும் உரிமையை இலங்கை பிரஜைகள் வினைதிறனான முறையில் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்வது.

 

பணி நோக்கு


வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சியின் இணைந்ததாகஅனைத்துஅரச அதிகாரிகளினதும் செயற்பாடுகளை கண்காணித்தல் மற்றும் செயல்விளைவுடன் நீதியின் முன்கொண்டு செல்லுதல் ஊடாகவும், பிரசைகள் தமக்கு தேவையான தகவல்களை அறிந்துகொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதன் மூலம் இலங்கை பிரசைகள் அனைவருக்கும் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்தல்.

 

இலக்குகள்

•வேண்டுகோள்களை செயன்முறைப்படுத்துவதற்கு இயலச் செய்யும் ஏற்பாடுகளை ஊக்குவித்தல்: மேன்முறையீடுகள் தொடர்பாக ஒழுங்குகளை உருவாக்குதல், விசாரணைச் செயன்முறைகள், தகவல் வழங்குவதற்கான கட்டண அட்டவணை மற்றும் அறிக்கை வடிவொழுங்குகள், தகவலறியும் உரிமை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு விளைவு கொடுக்கும் நோக்கத்திற்காக பணிப்புரைகளையும் வழிகாட்டுதல்களையும் பிரசுரித்தல், ஊடக அமைச்சால் முன்மொழியப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான மதியுரை, ஆணைக்குழுவின் மேலோட்டப்பார்வை மற்றும் தீர்ப்பு வழங்கல் வகிபங்கை பகிரங்கப்படுத்தல்.
•செயல்விளைவுடைய தீர்ப்பு வழங்கல் மற்றும் அமுல்படுத்தல்: அரசாங்க அதிகாரிகளுக்கும் தகவல் கோருவோருக்கும் இடையிலான பிணக்குகளில் வினைத்திறனுடன்; தீர்ப்பு வழங்கல்.
•அரச உத்தியோகத்தர்களின் பயிற்சிகளுக்கு ஆதரவு வழங்குதல்: அரச உத்தியோகத்தர்களின் பயிற்சியில் கூட்டுழைப்பு, மற்றும் பங்காண்மையாளர்களுக்கான தகவல் அறியும் உரிமை மீதான விசேடித்த பயிற்சிகளில் ஆதரவளித்தல்.
•பொது விழிப்புணர்வை அதிகரித்தல்: ஆணைக்குழுவின் இணையத்தளம் மற்றும் ஏனைய ஊடகங்கள்ஊடாக தகவலறியும் உரிமைசட்டத்தினை குறித்து பொதுமக்களின் விழிப்புணர்வைஅதிகரித்தல்.
•ஆவண முகாமைத்துவத்தை முன்னேற்றுதல்: வழிகாட்டுதல்களின் வழியாக தகவல்கள் முகாமைத்துவம் மீதான நுணுக்கமான பணிப்புக்களை வழங்குதல்
•துடிப்பான செயற்பாட்டு வெளிப்படுத்துகையை அதிகரித்தல்: வழிகாட்டல்களை வழங்குவதன்மூலம்தகவல் வெளிப்படுத்துகையின் துடிப்பான செயற்பாட்டை வளர்த்துக்கொள்ளல்இ குறைந்தபட்ச நியமங்களை விதித்தல்இதற்போதைய சட்டங்களுக்கு மீளமைப்புக்களையும் காலத்திற்கேற்ப மதிப்பீட்டு அறிக்கைகளைவும் வழங்கல்
•செயல்விளைவுடைய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறைமையைநிறுவுதல்: பொருத்தமான இணையவழி தீர்வுகள் மற்றும் மதிப்பீட்டுக் கருவிகளை பயன்படுத்துவதன் ஊடாக அரச அதிகாரிகள் தகவலறியும் உரிமையை அமுல்படுத்துவதன் செயல்விளைவை கண்காணித்தலும் மதிப்பீட்டை மேற்கொள்ளலும்.

மூலம் :- இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு

 

 

சட்டமூலங்களைப் பார்வையிட.........

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

மேலும்

தகவலைப் பெறுவதற்கான விண்ணப்பம் (கட்டாயமான தேவைப்பாடு அல்ல)

மேன்முறையீட்டுப் படிவம் (கட்டாயமான தேவைப்பாடு அல்ல)

Scroll To Top